கோடநாடு வழக்கு விவகாரம் - கேரள பூசாரிகளிடம் 19 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் கேரளாவைச் சேர்ந்த பூசாரிகளான சந்தோஷ்சாமி, மனோஜ் சாமி ஆகியோர்களிடம் காவல்துறை தனிப்படையினர் 19 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டனர்.
உதகை மாவட்ட பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 2ம் நாளாக சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவர்கள் தான் கோடநாடு பங்களாவில் கொள்ளையடிக்கத் தேவையான கூடுதல் ஆள்களையும், பொருள்களையும் ஏற்பாடு செய்தவர்கள் என்று முந்தைய விசாரணை முடிவில் காவல் துறையினர் குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்த கோடநாடு வழக்கில் 5 மற்றும் 6வது நபர்களாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த சதீஷன், பிஜின்குட்டி ஆகியோரிடமும் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையடிக்கத் தூண்டியது யார், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பற்றியும் தனிப்படையினர் அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டு வாக்கு மூலங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
காவல்துறை தனிப்படையினர் இவர்களிடம் 19 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள தீபு, ஜியின் ஜாய் ஆகியோர் கொரோனா காரணமாக நேரில் ஆஜராக வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.