3 குழந்தைகளை துடிதுடிக்க கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை : அதிர்ச்சி சம்பவம்! நடந்தது என்ன?
வேலூரில் குடும்பத் தகராறில் மன உளைச்சலான பெண் 3 குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூர் மாவட்டம், சலவன்பேட்டை கச்சேரி தெருவை சேர்ந்தவர் தினேஷ். இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி ஜீவிதா. கணவன் தினேஷ் தினமும் மதுபோதையில் வந்து ஜீவிதாவையும், குழந்தைகளையும் தாக்கி வந்துள்ளார். இதனால் தினசரி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானார் ஜீவிதா. இதனையடுத்து, தனது 7 வயது பெண் குழந்தை அட்சயாவையும், 5 வயது ஆண் குழந்தை நந்தகுமாரையும், 6 மாத கைக் குழந்தையையும் பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். இதன் பிறக, அவரும் வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தெற்குகாவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கைப் பதிவு செய்த போலீசார், 4 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் எடி.எஸ்.பி ஆல்பர்ட் ஜான் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். கணவரின் மது போதையால் இந்த குடும்பத்தில் உள்ள 4 பேரும் தற்கொலை செய்துகொண்ட அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.