2 ஆண்டுகளாக 2 குழந்தைகள், மாமியாருடன் கழிப்பறையில் வசித்து வரும் பெண்! கண்ணீரோடு பேசிய சோகச் சம்பவம்
தெலுங்கானா மாநிலம், மஹபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஜாதா. இவர் தினக் கூலி வேலை செய்து வருகிறார். இவரது கணவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதனையடுத்து, தனது 2 குழந்தைகள் மற்றும் மாமியாருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, தெலுங்கானா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக சுஜாதாவின் வீடு இடிந்து விழுந்து விட்டது.
இதனால் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் தனது 2 குழந்தைகள் மற்றும் மாமியாருடன், சுஜாதா தஞ்சமடைந்தார். அங்கிருந்தும் சில நாட்களில் அவர்களை வெளியேறச் சொல்லிவிட்டனர்.
வசிப்பதற்கு இடம் இல்லாமல் தவித்த சுஜாதா, அதே பகுதியில் அரசு கட்டிய பொது கழிப்பறையை வீடாக மாற்றினார். கடந்த 2 ஆண்டுகளாக அந்த கழிப்பறையிலேயே வசித்து வருகிறார். கழிப்பறையில் அமைந்திருந்த மலம் கழிக்கும் பகுதியை கடப்பா கல் வைத்து மறைத்து வைத்திருக்கிறார்.
மேலும், அந்த கழிப்பறையில் சமையல் எரிவாயு சிலிண்டர், அடுப்பு போன்ற பொருட்களையும் வைத்துள்ளார். தனது நிலை குறித்து செய்தி நிறுவனம் ஒன்றில் கண்ணீர் கல்க பேசிய சுஜாதா, "நானும், எனது மாமியாரும் கழிப்பறைக்கு வெளியே தூங்குவோம். 2 குழந்தைகள் உள்ளே தூங்குவார்கள். மழை பெய்யும் காலங்களில், குழந்தைகளை உள்ளே தூங்க வைத்துவிட்டு, நான் தூங்கவே மாட்டேன். எங்களின் நிலைமை யாருக்கு புரியும்?" என்று கண்ணீரோடு பேசினார்.
இந்த சம்பவத்தை அறிந்த பஞ்சாயத்து நிர்வாகம் கழிப்பறைக்கு அருகே சுஜாதாவுக்கு வீடு கட்டி தருவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இரண்டு வருடங்களாக 2 குழந்தை மற்றும் மாமியாருடன் பெண் ஒருவர் கழிப்பறையில் குடும்பம் நடத்தி வந்த சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
#ToiletEkGharKiKatha: 30-yr-old Sujatha removes a stone slab to show where she cooks so her family of four can eat: on top of an Indian commode inside a toilet which serves as home for the #ScheduledCaste family in #Tirumalagiri #Jadcherla #Mahbubnagar #Telangana @ndtv @ndtvindia pic.twitter.com/obY5fFTJBg
— Uma Sudhir (@umasudhir) September 21, 2021