குழந்தை தொட்டிலுக்கு மேலே தொங்கிய 10 அடி பாம்பு! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை
நாகையில் குழந்தையின் தொட்டிலுக்கு மேலே தொங்கிய 10 அடி பாம்பு எலியை விழுங்கியதால் பாம்பு தொட்டியிலிருந்த குழந்தையை தீண்டாமல் இருந்துள்ள சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வெளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் உமாநாத். இவரது மனைவி சந்தியா. இவர் தனது 10 மாத பெண் குழந்தை லக்கிதாவை வீட்டில் உள்ள தொட்டிலில் தூங்க வைத்திருக்கிறார்.
அப்போது குழந்தை இருந்த தொட்டிலில் மேல்பகுதி கயிரில் மாற்றம் தெரிந்திருக்கிறது. அதனை பார்த்தபோது தொட்டியின் மேல் பகுதியை ஓட்டின் வாரையில் 10 அடி நீள பாம்பு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து குழந்தையை தூக்கிக்கொண்டு தாய் சந்தியா அலறியடித்து வீட்டின் வெளியே ஓடினார்.
அருகில் இருந்தவர்களிடம் பாம்பு இருப்பதைப் பற்றி கூறினார். உடனே அருகில் இருந்தவர்கள் சாரைப்பாம்பு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் பாம்பை பிடிக்க முயற்சி செய்தார்கள். பாம்பு தனது வாயில் எலியை விழுங்கிய நிலையில் வீட்டின் ஒடுகளுக்கு இடையே மறைந்து கொண்டிருந்தது.
பாம்பு பிடிக்கும் நவீன கருவியை கொண்டு 10 அடி நீள சாரை பாம்பை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் தீயணைப்பு துறையினர் பிடித்தனர். இதனையடுத்து, பாம்பை பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர்.
எலியை விழுங்கியதால் பாம்பு தொட்டியிலிருந்த குழந்தையை தீண்டாமல் இருந்திருக்கிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.