கைக்குழந்தையுடன் கணவனை தேடிச்சென்ற இளம்பெண்: பேரதிர்ச்சி தந்த போஸ்டர்- நடந்தது என்ன?

samugam-viral-news
By Nandhini Sep 22, 2021 09:47 AM GMT
Report

பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லிச் சென்ற கணவன் வீடு திரும்பவில்லை என்று கைக்குழந்தையுடன் அவரை தேடிச் சென்ற இளம்பெண்ணுக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டு கதறி அழுதுள்ளார்.

அவரின் கண்ணில் கணவரின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தட்டுப்பட்டதுதான் அதற்கு காரணம். திருவள்ளூர் மாவட்டம் அயலூர் கிராமத்தைச் சேர்ந்த அமுல். இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் தினமும் ரயிலில் மருத்துவமனைக்கு சென்று வரும்போது ஆரணி அடுத்த காரணி கிராமத்தில் வசித்து வந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த கௌதம் என்பவருடன் காதல் ஏற்பட்டது.

இவர்கள் காதலுக்கு கௌதம் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பை மீறி 2019ம் ஆண்டு அமுலை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் கௌதம். சென்னையில் இருவரும் தனியாக வீடு வாடகை எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில், வாரம் ஒரு முறை மட்டும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வந்திருக்கிறார் கௌதம்.

இந்நிலையில் அமுலுக்கு பிரசவ காலம் வந்துவிட்டதால் உதவிகள் தேவைப்பட்டதால் அவரின் அக்கா ஊரான ஆவூரில் குடிபெயர்ந்துள்ளார். கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. இதன் பின்னர் கடந்த 17ம் தேதியன்று கௌதமின் உறவினர் இறந்துவிட்டதாக அமுலுக்கு தகவல் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து, ஆரணியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்ற கௌதம் பின்னர் வீடு திரும்பவில்லை. கணவரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியான அமுல் கைக்குழந்தையுடன் கணவனைத் தேடி அவரது ஊருக்கு சென்றுள்ளார். அங்கே ஊரில் கணவரின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்.

கணவர் இறந்து விட்டதாகவும் அவரது உடலை எரித்து விட்டதாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர். தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் தன் கணவரை ஆணவக்கொலை செய்துவிட்டார்கள்.

தடயங்களை மறைப்பதற்காகத்தான் மனைவியான தனக்கு கூட தகவல் தெரிவிக்காமல் அவசர அவசரமாக உடலை எரித்து இருக்கிறார்கள் என்று ஆரணி போலீசில் அமுல் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கைக்குழந்தையுடன் கணவனை தேடிச்சென்ற இளம்பெண்: பேரதிர்ச்சி தந்த போஸ்டர்- நடந்தது என்ன? | Samugam Viral News