சென்னையில் விடிய விடிய கொட்டிய கனமழை - சாலையில் வெள்ள நீர் நிரம்பியது
நேற்று இரவு முதல் சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு முழுவதும் இரவில் பரவலாக மழை கொட்டி தீர்த்துள்ளது.
சென்னை அண்ணா நகர், கோயம்பேடு, வில்லிவாக்கம், அமைந்தகரை, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வந்தது. சென்னையில் விடிய விடிய இடி, மின்னலுடன் கொட்டிய கனமழையால் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
அடுத்த ஓரிரு மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தி.மலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 5 நாட்களுக்கு கனமழை பெய்யும். குறிப்பாக திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
நாளை டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.