உலகிலேயே மிக உயரமான 146 அடி உயர முருகன் சிலை - சேலத்தில் டிசம்பரில் கும்பாபிஷேகம்
உலகின் மிக உயரமான முருகன் சிலை என்று மலேசியா பத்துமலையிலுள்ள 140 அடி உயர முருகன் சிலை தான் பேசப்பட்டு வந்தது. ஆனால், தற்போது சேலம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் வாழப்பாடி அடுத்த புத்திர கவுண்டம்பாளையத்தில் 146 ஆறு அடி உயரத்தில் அமைந்திருக்கும் முருகன் சிலை தான் உலகின் மிக உயரமான சிலையாக கருதப்பட உள்ளது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பத்துமலையில் உள்ள முருகன் சிலையை விடவும் 6 அடி இந்த சிலை உயரம் கொண்டது.
பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த ஸ்தபதி குழுவினர் தான் சேலத்தில் உள்ள இந்த முருகன் சிலையையும் வடிவமைத்து வருகிறார்கள். திருவாரூரைச் சேர்ந்த ஸ்பதி தியாகராஜன் தலைமையிலான குழுவினர் தான் பத்துமலையில் உள்ள முருகன் சிலையை வடிவமைத்தவர். அவர்கள்தான் சேலத்தில் உள்ள 146 அடி உயர முருகன் சிலையையும் அமைத்து வருகின்றனர்.
2016ம் ஆண்டு, தொடங்கப்பட்ட இந்தப் பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தினமும் 25 சிலை வடிவமைப்பு கலைஞர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் பணி நிறைவடைந்துள்ளன.
இந்த 146 அடி உயர சிலை தற்போது லிப்ட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த லிப்ட் மூலமாக பக்தர்கள் மேலே சென்று முருகன் சிலையின் கையில் உள்ள வேல் மீது பால் ஊற்றி அபிஷேகம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
சிலைக்கான பணிகள் டிசம்பர் மாதத்தில் முழுவதுமாக முடிவடைய உள்ளன. இதனையடுத்து டிசம்பர் மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தகவல் அறிவிக்கப்பட்டுள்ளன.