மடாதிபதி நரேந்திர கிரி தற்கொலை : சீடர் உட்பட 3 பேர் கைது! சிக்கிய கடிதத்தில் திடுக்கிடும் தகவல்
உத்தர பிரதேச அகில பாரதியா அகார பரிஷத் மடாதிபதி நரேந்திர கிரி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது சீடர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாகம்பரி மடத்தில் அகில பாரதியா அகார பரிஷத் மடத்தின் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவரது வீட்டில் இருந்த கடிதத்தின் அடிப்படையில் அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.
இந்த தற்கொலைக் குறிப்பில் அவரது தற்கொலைக்கான காரணம் அவருடைய சீடரான ஆனந்த் கிரி மற்றும் 2 பேர் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரது சீடரான ஆனந்த் கிரி மற்றும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவர்கள் மீது பிரயாக்ராஜ் ஜார்ஜ் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆனால், இது தொடர்பான குற்றச்சாட்டை மறுத்துள்ள குருஜியின் சீடர் ஆனந்த் கிரி, தனது வாழ்க்கையில் ஒருமுறை கூட குருஜி எழுதியது கிடையாது எனவும், அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார். இது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும், அவரது கையெழுத்து குறித்து அவசியம் ஆய்வு செய்யப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.