கள்ளக்காதலனுக்காக பெற்ற மகளை அடித்துக்கொன்று ஆற்றில் வீசிய கொடூர தாய்!
தஞ்சாவூர் கோரிகுளத்தைச் சேர்ந்தவர் ரங்கேஸ்வரன். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு நித்தியா என்ற 7 வயது மகளும், விக்னேஷ் என்ற 4 வயது மகனும் உள்ளனர். ரங்கேஸ்வரன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால் விஜயலட்சுமிதான் இரண்டு பிள்ளைகளையும் வளர்த்து வந்தாள்.
கணவர் உயிரிழந்ததால், போதிய வருமானம் இல்லாமல் தவித்து வந்துள்ளார் விஜயலட்சுமி. இந்நிலையில், அண்ணன் முறை கொண்ட அவரது உறவினரான வெற்றிவேல் என்பவருடன் விஜயலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் விஜயலட்சுமிக்கு அவ்வப்போது உதவிகள் செய்து வந்துள்ளார். நாளடைவில் இந்த பழக்கம் கள்ள உறவாக மாறியது. அண்ணன் முறை கொண்ட ஒருவரிடம் கள்ள உறவு வைப்பதா? என்று உறவினர்கள் இருவரையும் கண்டித்துள்ளனர்.
வெற்றிவேலுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவரது குடும்பத்தினரும் வெற்றிவேலை கடுமையாக கண்டித்துள்ளனர். ஆனாலும் அதையெல்லாம் அவர் சமாளித்து வந்துள்ளார். ஆனால், வெற்றிவேல் -விஜயலட்சுமியின் கள்ள உறவுக்கு விஜயலட்சுமி 7 வயது சிறுமி இடையூறாக இருந்து வந்துள்ளாள். அவர்களால், சிறுமியை சமாளிக்க முடியவில்லை. இதனால் இருவரும் என்ன செய்யலாம் என்று யோசித்துள்ளனர்.
பின்னர் கொன்றுவிடுவதான் சரியான வழி என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அப்போதுதான் நாம் உல்லாசமாக இருக்க முடியும் என்று கள்ளக்காதலன் சொல்ல, தாயும் அதுதான் சரியானது என்று முடிவெடுத்துள்ளார். திட்டமிட்டபடி 7 வயது சிறுமியை வெற்றிவேல் கொடூரமாக தாக்கியுள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திலேயே அந்த சிறுமி உயிரிழந்துள்ளாள்.
இதனையடுத்து, மகள் உடலை என்ன செய்வது என்று கள்ளக்காதலனிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் விஜயலட்சுமி. கல்லணை கால்வாயில் கொண்டுபோய் வீசி விடலாம் என்று வெற்றிவேல் சொல்ல, அதுமாதிரியே செய்திருக்கிறார்கள் இரண்டு பேரும். தான் செய்த இந்த செயலை வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த தன் மனைவியிடம் சொல்லி, உயிரிழந்த சிறுமியின் புகைப்படத்தையும் மனைவிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் வெற்றிவேல்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வெற்றிவேல் மனைவி, கள்ளக்காதலியின் பிள்ளையை கொடூரமாக கொன்ற கணவன் நம் பிள்ளையையும் கொள்ள மாட்டார் என்பது என்ன நிச்சயம் என்கிற அச்சத்தில் தஞ்சாவூரில் உள்ள தனது உறவினர்களிடம் இது குறித்து தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், வெற்றிவேல், விஜயலட்சுமி ஆகியோரை கைது செய்துள்ளனர்.