முன்விரோதம் - பரோட்டா மாஸ்டர் ஓட ஓட வெட்டி கொடூரக்கொலை! அதிர்ச்சி சம்பவம்
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (27). இவர் புதுப்பாளையம் பகுதியில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கிறார்கள்.
இந்நிலையில், வெங்கடேசனுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி மதுசூதனன் என்பவருக்கும் எருது விடும் திருவிழா தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் வெளியூரில் தங்கியிருந்த வெங்கடேசன், சமீபத்தில் வீரனேந்தலுக்கு வந்திருக்கிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வெங்கடேசன், தனது நண்பரான தர்மனுடன் உண்ணாமலை பாளையம் அருகே நடந்து சென்றிருக்கிறார். அப்போது, அங்கு வந்த மதுசூதனன், அவரது தம்பி சுரேஷ் மற்றும் கூட்டாளிகள் 4 பேர் சேர்ந்து, வெங்கடேசனை ஓட, ஓட அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார்கள்.
அவர்களிடமிருந்து தப்பிய தர்மன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த புதுப்பாளையம் போலீசார் விரைந்து சென்று வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, மதுசூதனன் (33), அவரது தம்பி சுரேஷ் (30), வல்லரசு (26), ஏழுமலை (24) ஆகியோரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய 2 நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.