வேட்பாளராக களமிறங்கும் பங்காரு அடிகளார் மனைவி - சொத்துமதிப்பு இவ்வளவா...?
மேல்மருவத்தூர் என்ற பெயரைக் கேட்டலே பங்காரு அடிகளார் தான் நினைவுக்கு வருவார். ஆதிபராசக்தி அம்மன் கூட இரண்டாம்பட்சம் தான். அந்தளவிற்கு அவர் மிகவும் பிரபலம். மேல்மருவத்தூர் எங்கு பார்த்தாலும் அவருக்குச் சொந்தமான நிலங்கள் தான் இருக்கும். அவர் பெயரில் கல்வி நிறுவனங்களும் இருக்கின்றன. தற்போது மேலும் ஆச்சரியமளிக்கும் விதமாக அவரது மனைவி லட்சுமியின் சொத்துமதிப்பு வெளியாகி உள்ளது. அவருடைய மனைவி பெயரில் ரூ.253 கோடி சொத்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
உண்மையில் அவருக்கு அவ்வளவு சொத்து உள்ளதா? என்பதைப் பற்றி அறிந்துகொள்வோம். தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களில் இந்தத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 22ம் தேதியோடு நிறைவு பெற்றுள்ளது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலரும் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். அதில் லட்சுமியின் வேட்புமனு கவனம் பெற்றது. அவர் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு 3ம் முறையாகப் போட்டியிட உள்ளார். இவருக்கு மாற்று வேட்பாளராக பங்காரு அடிகளாரின் மகன் செந்தில்குமார் போட்டியிட இருக்கிறார். இடைப்பட்ட 10 ஆண்டுகளில் இந்த ஊராட்சி பட்டியலினத்திற்கு மாற்றப்பட்டதால் இவரால் போட்டியிட முடியவில்லை. தற்போது மீண்டும் போட்டியிட உள்ளார்.
அரசியல் கட்சிகளின் சார்பில்லாமல் சுயேச்சையாகக் களமிறங்குகிறார். அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் சொத்துமதிப்பு சுமார் 250 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இவ்வளவு சொத்து இருக்கா என்று அனைவரையும் வாயைப் பிளக்க வைத்துள்ளது.
ஆனால் அதற்குப் பின் அவ்வளவு சொத்து மதிப்பெல்லாம் இல்லை என்று அவர்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுவில் ஏற்பட்ட குளறுபடி தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.
ஆம், அவரின் அசையும் சொத்து 7 கோடி ரூபாயாகவும் அசையா சொத்து 16 கோடி ரூபாயாகவும் உள்ளது. இரண்டையும் கூட்டி 23 கோடி என்று போடுவதற்குப் பதில் 253 கோடி என்று பிழையாக கூட்டி எழுதப்பட்டிருக்கிறது. இதுதான் அனைத்துக் குழப்பத்திற்குக் காரணம் என்று சொல்லப்பட்டுள்ளது.