சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட தகராறு- தலையில் ஓங்கி அடித்து கொலை! அதிர்ச்சி சம்பவம்
பல்லாவரம் அருகே சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (70).
இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று கோவிலுக்கு சென்றுவிட்டு இரவு 8 மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவசரமாக சிறுநீர் வந்துவிட்டதால் அவரது வீட்டின் அருகே சிறுநீர் கழித்திருக்கிறார்.
அப்பகுதியில் வசித்து வரும் சீனிவாசன் (55) என்பவரது வீட்டின் அருகே அவர் சிறுநீர் கழித்துதாக சொல்லப்படுகிறது. அந்தச் சமயம் பார்த்து வெளியே வந்த சீனிவாசன் ராஜேந்திரனை தகாத வார்த்தைகளில் திட்டி இருக்கிறார்.
இதனால், இருவருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால், ஆத்திரமடைந்த சீனிவாசன் அருகே இருந்த உருட்டு கட்டையை எடுத்து ராஜேந்திரனை தலையில் பலமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையிலிருந்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.
அங்கு 7 நாட்களாக ராஜேந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சீனிவாசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.