பிரபல ரவுடி தலை துண்டித்து கொடூரக் கொலை: கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் மறைமுக எச்சரிக்கை... பீதியில் திருச்சி மக்கள்!
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சின்ராஜ். இவர் பொன்மலைப்பட்டி கடைத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். பின்னர், அந்தக் கும்பல், சின்ராஜின் தலையை துண்டித்து படுகொலை செய்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி சிசிடிவி கேமரா உதவியுடன் கும்பலுக்கு வலை வீசி தேடி வருகிறார்கள். விசாரணையில் 4 நாட்களுக்கு முன் ராமகிருஷ்ணா மேம்பாலத்தின் கீழே உள்ள கழிவறையில் இயற்கை உபாதை கழிக்க சென்ற நிஷாந்த் என்பவரை ஒரு கும்பல் ஓட ஓட வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது.
இந்நிலையில், அந்த கொலைக்கு கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்ததால் நிஷாந்த்தின் நண்பர்கள் விஜய் என்பவரை வெட்டி படுகொலை செய்துள்ளனர். பதிலுக்கு விஜயனி தம்பி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நிஷாந்த் என்பவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, தொடர்ச்சியாகத்தான் சின்ராஜ் என்பவரும் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், சின்ராஜ் மறைவையொட்டி அப்பகுதி முழுவமும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.
அதில் மரணமடைந்த சின்ராஜ் ஊர்வலம் மாலை 4 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து புறப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என எழுதியிருந்தனர். ஆனால் இறுதியில் விரைவில் என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. இந்த வார்த்தையால் மீண்டும் பழிக்கு பழிக்கு கொலை நடக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உறைந்து போயுள்ளனர்.