ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை : பசியால் உயிரிழந்த 9 மாத குழந்தை - அதிர்ச்சி சம்பவம்
பெங்களூரில் குடும்ப தகராறு காரணமாக ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டதால், 9 மாத குழந்தை பசியால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர், பேடரஹள்ளி அருகே சேத்தன் சர்க்கிள் 5-வது கிராஸ் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி பாரதி.இந்த தம்பதிக்கு சிஞ்சனா, சிந்துராணி என்ற மகள்களும், மதுசாகர் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் திருமணமாகி சிஞ்சனாவுக்கு 3 வயதில் பிரக்சா என்ற பெண் குழந்தையும், சிந்துராணிக்கு பிறந்து 9 மாதங்களே ஆன ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். சங்கர் பத்திரிகை நடத்தி வருவதுடன், அதன் ஆசிரியராகவும் இருந்து வந்தார்.
குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட தகராறு காரணமாக சங்கர் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டு சென்றுள்ளார். இதனையடுத்து, அவர் 5 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று மாலையில் சங்கரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் கதவை திறந்து பார்த்தனர்.
அப்போது பாரதி தூக்கில் அழுகிய நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பாரதி, அவரது மகள்கள் சிந்துராணி, சிஞ்சனா, மகன் மதுசாகர் ஆகிய 4 பேரும் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர்.
வீட்டின் மற்றொரு அறையில் 9 மாத குழந்தை பிணமாக கிடந்துள்ளது. மேலும், மற்றொரு அறையில் மயங்கிய நிலையில் 3 வயது குழந்தை பிரக்சா இருப்பதை கண்டனர். உடனடியாக அந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்தில் சிஞ்சனாவின் 3 வயது பெண் குழந்தையான பிரக்சா மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் 5 நாட்களுக்கு பிறகு 3 வயது குழந்தை உயிர் பிழைத்திருப்பதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.