பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய எம்.பி. – போலீஸ் விசாரணை தொடக்கம்
பீகார் மாநிலத்தில் சமஸ்திப்பூர் தொகுதியின் எம்.பி.யாக இருப்பர் பிரின்ஸ் ராஜ் பஸ்வான். லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த பிரின்ஸ் ராஜ் பஸ்வான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக ஒரு பெண் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அந்த பெண் கடந்த மே மாதம் டெல்லி போலீசில் புகார் கொடுத்தார்.
ஆனால், அப்பெண்ணின் புகாரை பிரின்ஸ் மறுத்தார். அந்தப் பெண் தன்னிடம் பணம் பெறும் நோக்கத்தோடு போலியான குற்றச்சாட்டுகளை வைக்கிறார் என்று கூறினார். பின்னர், அந்தப் பெண் மீதே பதில் புகார் அளித்தார். இந்நிலையில், தான் அளித்த புகார் குறித்து போலீசார் உரிய விசாரணை நடக்கவில்லை என்றும், பிரின்ஸ் ராஜ் பஸ்வான் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார் அப்பெண்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் லோக் ஜனசக்தி எம்.பி. பிரின்ஸ் ராஜ் பஸ்வான் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த டெல்லி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பிரின்ஸ் ராஜ் பஸ்வான் மீது டெல்லி ஹன்நாட்டி பிளேஸ் போலீசார் பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்துள்ளனர். பலாத்காரம், குற்றச் சதி, ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பிரின்ஸ் ராஜ் பஸ்வான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கி உள்ளனர் டெல்லி போலீசார்.