கொரோனா தடுப்பூசி போட்டாச்சா? அப்போ உங்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் - அசத்தல் அறிவிப்பால் குவிந்த மக்கள்!

திருவண்ணாமலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனாவின் கொரோனாப் பிடியிலிருந்து தப்புவதற்கு தடுப்பூசி தான் ஒரே வழி என்று மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால், தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

இரண்டாம் அலையில் மரண பீதியை உணர்ந்த மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கிறார்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களை ஊக்குவிக்கும் விதமாக பல நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்து வருகிறது. சில ஜவுளிக்கடைகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருபவர்களுக்கு 20 முதல் 50% தள்ளுபடி என அறிவிக்கப்பட்டிருந்தது.

குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கக்காசு, வெள்ளி பரிசு பொருட்கள், புடவை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என்றெல்லாம் கூட அசத்தல் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், திருவண்ணாமலையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தனியார் ஓட்டுனர் பயிற்சி அசோசியேசன் சார்பில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தலா 1 லிட்டர் பெட்ரோல், அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் மற்றும் பிஸ்கெட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த முகாமை நேரில் ஆய்வு செய்த கலெக்டர் முருகேஷ் பெட்ரோல் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர், தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளி அசோசியேசன் நிர்வாகிகளை கலெக்டர் வெகுவாக பாராட்டினார். பெட்ரோல் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், இலவச பெட்ரோல் அறிவிப்பால் பலர் முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.   

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்