11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 இளைஞர்கள் - போக்சோ சட்டம் பாய்ந்தது!
ராமநாதபுரம் அருகே 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த 2 இளைஞர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளம் பகுதியை சேர்ந்தவர் 11 வயது சிறுவன். இவர் அங்குள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென மாயமானார். இதனால் சிறுவனின் பெற்றோர் சிறுவனை தேடினார்கள்.
இதனையடுத்து, அதே பகுதியை சேர்ந்த உறவினர் முகமது பிலால் (24) என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து சிறுவனை அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதன் பிறகு, சிறுவனின் பெற்றோர் முகமது பிலாலை பிடித்து விசாரணை செய்தனர். ரொம்ப நேரம் கழித்து, சிறுவன் வீட்டிற்கு வந்தான். அப்போது சிறுவனிடம் பெற்றோர்கள் விசாரித்தனர்.
அப்போது, தன்னை முகமது பிலால், அவரது நண்பரான சேகு ஆகியோர் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுவன் தெரிவித்தான். இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, சிறுவனின் பெற்றோர் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் முகமது பிலால், சேகு ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நேற்று இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.