கோவையில் காரிலிருந்து பெண் சடலம் வீசப்பட்ட விவகாரம் - ஓட்டுநர் கைது - அதிர வைக்கும் பின்னணி
கோவையில் ஓடும் காரிலிருந்து பெண் சடலமாக வீசப்பட்டதாக எழுந்த விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. கோவை அவினாசி சாலையில் உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் கடந்த 9ம் தேதி அதிகாலை ஒரு பெண்ணின் சடலம் சிதைந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் சென்றது.
இதனையடுத்து, சாலை விபத்தால் இறந்திருக்கக்கூடும் என்று நினைத்த போலீசார் சிசிடிவி காட்சிகளை பார்த்து, இது சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தார்கள். மேலும், இந்த சிசிடிவி கேமராவில் அதிகாலை 5:44 மணியளவில் அந்தப் பகுதியை கடக்கும் காரிலிருந்து ஒரு சடலம் விழுவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.
இதைத் தொடர்ந்து இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகி வைரலானது. இதனையடுத்து, போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இது கொலையாக இருக்கலாம் எனவும் யூகிக்கபட்டிருந்தது.
இந்நிலையில், பெண்ணின் சடலம் வீசப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் யார்? என்பதை உடனடியாக கண்டறியவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் தமிழக டிஜிபிக்கு தேசிய பெண்கள் நல ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
இதைத்தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மூதாட்டி ஒருவர் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கி டயரில் மாட்டி இழுத்து வரப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வீடியோவில் பதிவாகி உள்ள கார் ஓட்டுனர் பைசலிடம் பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது குறித்து கூடுதல் தகவல்கள் காவல்துறை தரப்பில் இருந்து வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.