டீசலை திருடி விற்ற ஓட்டுநர் - அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய உரிமையாளர் - வெளியான வீடியோவால் பரபரப்பு!
மணியனூர் பகுதியில் டீசல் திருடியதாக கூறி மதுபோதையில் ஓட்டுநரை அரை நிர்வாணமாக அமர வைத்து கயிற்றால் உரிமையாளர் தாக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் மணியனூர் அருகே பீரித்தி என்ற ஆட்டோ ஓட்டுனரை அரை நிர்வாணமாக அமர வைத்து சிலர் கயிற்றால் தாக்கும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
இது குறித்து வெளியான தகவலில், சேலம் அன்னதானபட்டி பகுதியை சேர்ந்த ஜெகதீஸ் என்பவரின் மினி ஆட்டோவின் ஓட்டுனராக கடந்த 7 ஆண்டுகளாக பீரித்தி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக 30 லிட்டர் டீசலை பீரித்தி திருடி விற்பனை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதை அறிந்த மினி ஆட்டோ உரிமையாளர் ஜெகதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஹரி, விஜய் ஆகிய 3 பேரும் மதுபோதையில் கடந்த 3ம் தேதி மணியனூரில் உள்ள காட்டுப்பகுதிக்கு ப்ரீத்தியை அழைத்துச் சென்று கயிற்றால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து, கடந்த 4ம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஓட்டுனர் பீரித்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது மினி ஆட்டோ உரிமையாளர் உட்பட 3 பேர் தன்னை தாக்கியதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக, அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்கு வழக்கு சென்ற நிலையில் வழக்குபதிவு செய்து விசாரித்தபோது இருதரப்பினரும் சமாதானமாக செல்வதாக தெரிவித்ததையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.