கணவனிடம் சண்டைபோட்ட மருமகளின் கழுத்தை நெரித்து தூக்கில் தொங்கவிட்ட மாமனார், மாமியார் கைது
நாட்றம்பள்ளியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவருக்கும், பிரியங்கா என்ற பெண்ணிற்கும் திருமணம் நடந்து 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சிலம்பரசன் தான் வேலை பார்த்து வந்த இடத்தில் அனுசுயா என்ற பெண்ணை விரும்பி வந்துள்ளார்.
அவருடன் ஏற்பட்ட கள்ள உறவில் அப்பெண் 5 மாத கர்ப்பிணியாகி இருக்கிறார். இந்த விவரத்தை தெரிந்து கொண்ட பிரியங்கா கணவரின் கள்ளக்காதலை தட்டி கேட்டுள்ளார்.
இதனால், குடும்பத்தில் அடிக்கடி சண்டை வந்துள்ளது. நாளுக்கு நாள் இந்த பிரச்சனை அதிகமாகிக்கொண்டே வந்ததால், சம்பவம் நடந்தன்று பிரியங்கா ஆத்திரத்தில் சத்தம்போட்டு பேசி கொண்டிருந்தார். அப்போது, சிலம்பரசன் அவரை அடித்து உதைத்துள்ளார். கொலை செய்து விடும் நோக்கத்தில் அவரின் கழுத்தை நெரித்துள்ளார். அதன் பின்னர் சிலம்பரசன் தந்தை ரவிச்சந்திரன், தாய் கலா ஆகியோரும் சேர்ந்து பிரியங்காவின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர்.
இதனையடுத்து, அவர் தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடி உள்ளனர். பிரியங்காவின் உடல்நிலை மின்விசிறியில் தூக்கு மாட்டி இருப்பது போல் செட்டப் செய்துள்ளனர். அதன் பின்னர் பிரியங்கா தற்கொலை செய்து கொண்டு விட்டதாக அவரது குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிரியங்காவின் உடலை பார்த்து கதறி அழுத அவரது தந்தை விஜய், மகளின் உடலில் இருந்த காயங்களை பார்த்து சந்தேகப்பட்டார்.
இதனையடுத்து, அவர் போலீசில் புகார் கொடுத்தார். தந்தை ராஜா கொடுத்த புகாரின்பேரில் சிலம்பரசன் மற்றும் அவரது குடும்பத்தாரை துருவித்துருவி போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் 3 பேரும் உண்மையை ஒப்புக்கொண்டதால், போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.