பிரபல நடிகர் பிறந்தநாள் கொண்டாட்டம் - மாட்டை வெட்டி பலி கொடுத்த ரசிகர்களால் சர்ச்சை வெடித்தது
கன்னட நடிகர் சுதீப் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அப்போது கொண்டாட்டத்தில் ஒரு எருமை மாட்டை வெட்டி பலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சுதீப். இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களிலும் நடித்து தேசிய அளவில் பிரபலமானவர். இவர் தனது அறக்கட்டளை மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், ஏழை, எளியோருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
சமீபத்தில் கூட தனது சொந்த ஊரான ஷிவமோகாவில், 133 வருட பழமையான அரசு பள்ளியைத் தத்தெடுத்தார். அந்த பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்தார். நடிப்போடு இல்லாமல், இதுபோன்ற சமூக சேவைகளின் ஈடுபடுவது மூலம் ரசிகர்கள் மனதில் அளவுக்கு அதிகமான அன்பை பெற்றிருக்கிறார்.
இதனையடுத்து, நடிகர் சுதீப் நேற்று தனது 50வது பிறந்தநாள் நாளை கொண்டாடினார். இதைத் தொடர்ந்து, அவரது ரசிகர்கள் மாநிலம் முழுவதும் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடினர். இதைத் தொடர்ந்து, பெல்லாரி மாவட்டம் சந்தூர் என்ற கிராமத்தில் சுதீப் ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி கட் அவுட் வைத்து பிரம்மாண்டமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அப்போது, சில ரசிகர்கள் அங்கு எருமை மாட்டை அழைத்து வந்தனர். அதை பலியிட்டு அந்த ரத்தத்தை கட் அவுட் மீது தெளித்து வழிபாடு செய்தார்கள். இந்நிகழ்வு சமூகவலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பெல்லாரி நகர் காவல் நிலையத்தில் சுதீப் ரசிகர்கள் 25 பேர் மீது போலுசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக மேல் விசாரணை செய்து வருகின்றனர்.