நடிகை மீராமிதுனை விடாமல் துரத்தும் வழக்குப்பதிவுகள் - 30 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போலீஸ்
ஜோ மைக்கேல் பிரவீன் என்பவரைப் பற்றி அவதூறு பரப்பியதாக நடிகை மீரா மிதுனுக்கு எதிராக போலீசார் 30 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களின் பட்டியல் இன மக்களை அவதூறாக நடிகை மீரா மிதுன் பேசினார். இதனையடுத்து, கடந்த கடந்த ஆகஸ்ட்14ம் தேதி அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கேரளாவில் பதுங்கி இருந்த மீராமிதுனை போலீசார் கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். இதனையடுத்து, மீராமிதுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டது. அவரது நண்பர் அபிஷேக் ஷியாமுக்கும் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதனையடுத்து, ஜாமீன் கோரி மீராமிதுன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர், 2-வது முறையாக அவருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை எம்.கே.பி நகர் போலீசார் மீரா மிதுனை மற்றொரு வழக்கில் கைது செய்திருக்கிறார்கள்.
ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் குறித்து மீரா மிதுன் அவதூறாக பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பிரவீன் அளித்த புகாரின் பேரில் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2வது வழக்கில் போலீசார் 30 பக்க அளவிலான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் அவருக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.