கடன் தவணை செலுத்தக்கோரி நெருக்கடி - மனவேதனையில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை!

samugam-viral-news
By Nandhini Sep 01, 2021 06:50 AM GMT
Report

திருச்சி அருகே கடன் தவணை செலுத்தக்கோரி நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து. இவர் ஒரு விவசாயி. இவர் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.1.50 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் வீதம் தவணை செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டதால் கடந்த 3 மாதங்களாக சரிவர தவணை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால், நிதி நிறுவனத்தினர் தவணை செலுத்தக்கோரி நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று மருதமுத்துவின் வீட்டிற்கு சென்ற நிதி நிறுவன ஊழியர் தவணை தொகையை உடனடியாக செலத்தும்படி கூறியுள்ளனர்.

தன்னிடம் பணம் இல்லை என்றும், 1 வாரத்தில் பணத்தை தருவதாக அவர் கூறினார். ஆனால், நிதி நிறுவனத்தினர் உடனடியாக பணத்தை வழங்க கூறி வீட்டின் முன்பாக அமர்ந்துள்ளனர். இதனை அக்கம்பக்கத்தினர் கண்டதால் மருதமுத்து அவமானமடைந்தார். இதனால், மனமுடைந்து அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மருதமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மருதமுத்துவின் மனைவி அளித்த புகாரின் பேரில், ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடன் தவணை செலுத்தக்கோரி நெருக்கடி - மனவேதனையில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை! | Samugam Viral News