தாயால் கொடூரமாக தாக்கப்பட்ட குழந்தை - நேரில் சென்று நலம் விசாரித்து ரூ.10 ஆயிரம் வழங்கிய அமைச்சர்!
செஞ்சி அருகே தாயால் கொடூரமாக தாக்கப்பட்ட குழந்தையை நேரில் சந்தித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் நலம் விசாரித்திருக்கிறார்.
கடந்த 2 மாதங்களாக பச்சிளங்குழந்தை ஒன்று பெற்ற தாயால் தாக்கப்படும் கொடூரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த குழந்தையின் நிலையை கண்டு தமிழகமே பதறிப்போனது.
ஈவு, இரக்கமின்றி நடந்துக் கொள்ளும் அந்த பெண்ணை கைது செய்ய வேண்டுமென நெட்டிசன்கள் கொந்தளித்து கமெண்ட் செய்தனர். அந்த வீடியோக்களை வைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவழகனின் மனைவி துளசி என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, துளசியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, தான் வேறு ஒருவருடன் கள்ள தொடர்பில் இருப்பதாகவும், அதற்கு இடையூறாக இருந்த குழந்தையை அடித்து தனது காதலனுக்கு வீடியோ எடுத்து அனுப்பியதாகவும் கூறி இருக்கிறார். துளசி அளித்த வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். துளசிக்கு 15 நாட்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தற்போது துளசி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பால் மனம் மாறாத பச்சிளங்குழந்தை பிரதீப், தனக்கு நடந்தது எதுவுமே தெரியாதது போல், தனது அண்ணனுடன் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. தனது தாத்தா, பாட்டியுடன் குழந்தை தற்போது பாதுகாப்பாக இருப்பதை அறிந்து தமிழக மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.
இந்த நிலையில், குழந்தையை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் குழந்தையின் மருத்துவ செலவுக்காக 10,000 ரூபாய் நிதியை வழங்கினார். குழந்தையுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.