தட்டிக் கேட்ட டிராபிக் போலீசாரை பட்டென கன்னத்தில் அறைந்த ஓட்டுநர் : வீடியோவால் பரபரப்பு!
சென்னை - போரூர் அருகே தவறான பாதையில் வந்ததால், மாற்றுச் சாலையில் செல்ல அறிவுறுத்திய போக்குவரத்து காவலரை வெளிமாநில லாரி ஓட்டுநர் ஒருவர் கன்னத்தில் அறைந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.
போரூர் ஏரி அருகே கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வீஸ் சாலையில் மகாராஷ்டிரா மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று செல்ல முற்பட்டது. அந்த லாரியை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலர்கள் மாற்றுச் சாலையில் செல்லும் படி கூறினர்.
போரூரில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணியினால் மாறிய சாலைகளால் குழம்பிப்போன வடமாநிலத்தவர் மொழி தெரியாததால் செய்வதறியாது திகைத்தனர்.
மேலும், போக்குவரத்து போலீசார் கூறியதை ஏற்க மறுத்தனர். அப்போது, போலீசாருக்கும், ஓட்டுநர் முஸ்தாக் அகமது என்பவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது போக்குவரத்து போலீசாரை கன்னத்தில் அறைந்தார். உடனே, இதுகுறித்து போக்குவரத்து காவலர் போரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, அங்கு வந்த போலீசார் லாரி ஓட்டுனர் முஸ்தாக் அகமதை கைது செய்தனர். மேலும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, தாக்கியது, ஆபாசமாக பேசியது ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். போக்குவரத்து போலீசாரை வடமாநில ஓட்டுநர் கன்னத்தில் அறைந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.