பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தில் சிக்கித் தவித்த 4 இளைஞர்கள் பத்திரமாக மீட்பு!
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித்தவித்த 4 இளைஞர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டெடுத்து கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், நேற்று மாலை மின்சார உற்பத்திக்காக பில்லூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது, ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 4 இளைஞர்கள் வெள்ளத்தில் இருந்து தப்பிப்பதற்காக ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டு மீது ஏறி கொண்டார்கள். அவர்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பதை கண்ட அந்த பகுதி மக்கள் மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீர்ர்கள், கயிறு கட்டி ஆற்று வெள்ளத்தில் சிக்கித்தவித்த 4 பேரையும் மீட்டார்கள். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் மதுரையை சேர்ந்த சுந்தரமூர்த்தி, அழகர், சக்திவேல் மற்றும் பகவதி என்பது தெரியவந்தது.