மிட்டாய் வாங்கி சாப்பிட்ட 3 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் - உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அட்மிட்!
ஆரணி அருகே நட்சத்திர மிட்டாய் சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், பையூர் பகுதியில் உள்ள சிறுவர்கள் யுவராஜ் (8), மகேஷ் (10), தனஞ்ஜெயன் (8). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் பிற்பகலில் வெளியே விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்தார்கள். வீட்டிற்கு வந்த சில மணி நேரத்திலேயே வாயில் நுரை தள்ளி 3 பேரும் மயங்கி விழுந்தனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் ஆரணி அரசு மருத்துவமனைக்கு 3 சிறுவர்களை அழைத்துச் சென்று சேர்த்தனர். மருத்துவமனையில் மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 சிறுவர்களின் நிலைமை இருந்ததால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர்களின் பெற்றோர் பேசுகையில், வீட்டின் அருகே உள்ள ஒரு கடையில் ஸ்டார் வடிவில் விற்கும் மிட்டாயை வாங்கி அவர்கள் சாப்பிட்டதாகவும், அதன்பிறகு சிறுவர்கள் உடல்நிலை மோசமானதாக தெரிவித்தனர்.
மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் கூறுகையில், வேதிப்பொருட்கள் கலந்த சில தின்பண்டங்களை விற்பனை செய்வதை உணவு பாதுகாப்புத்துறை தடுக்க வேண்டும். அந்த தின்பண்டங்கள் உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. சிறுவர்களை உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனர்.