“சர்வாதிகாரி ஸ்டாலின் போட்டோவை முதலில் தூக்கி எரியுங்கள்” – கிழித்தெடுத்த காங்கிரஸ்!
கம்யூனிஸ்ட்களின் மாபெரும் தலைவராக விளங்கியவர் ரஷ்யாவைச் சேர்ந்த ஜோசப் ஸ்டாலின். இவர் அப்போதைய சோவியத் யூனியனில் பொதுவுடைமை கட்சி தலைவர் லெனினுக்குப் பின்னர் ஜோசப் ஸ்டாலின் அக்கட்சிக்கு தலைவரானார். அதன் பின்னர், பல ஆண்டுகள் சோவியத் யூனியனின் அதிபராக ஆட்சி புரிந்தார்.
இவரின் பொருளாதாரக் கொள்கைகள் மக்களால் வரவேற்கப்பட்டன. ஆனால், 1930ம் ஆண்டு இவர் ஏற்படுத்திய அரசியல் தூய்மைப்படுத்தல் கொள்கையை கடைப்பிடிக்காததால் ஒழுக்கமின்மை, நம்பிக்கைத் துரோகம், ஊழல் என்று குற்றம்சாட்டி பல்லாயிரக் கணக்கானோரை படுகொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைனை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் குலாக் சிறைகளில் அடைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் என்றும், 1932 - 1933ஆம் ஆண்டுகளில் ஹோலோடொமோரில் 10 லட்சத்துக்கும் அதிகமான உக்ரைன் மக்களை ஜோசப் ஸ்டாலினின் படைகள் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இவரை சர்வாதிகாரி என்றும் முதலாளித்துவ தலைவர்கள் விமர்சனம் செய்தார்கள். இந்நிலையில், சமீபத்தில் உக்ரைனில் உள்ள விமான நிலையம் அருகே 24 கல்லரைகளில் 5,000 முதல் 8,000 பேர்களுடைய எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட எலும்பு கூடுகள், ஸ்டாலின் ஆட்சியில் தான் கொலை செய்யப்பட்டவர்களுடையது என்று விவாதம் எழுந்திருக்கிறது. இந்த விவாதம் கேரள சட்டப்பேரவை வரை எதிரொலித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ சதீசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “கம்யூனிஸ்ட் கட்சி என்றால் சர்வாதிகாரமும் இனப்படுகொலையும் தான். உக்ரைனில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள், மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் அறிந்த இந்த நாகரீக சமுதாயத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது கம்யூனிச கொள்கையின் கோரமுகத்தையும், சர்வாதிகாரத்தையும் எடுத்துரைக்கும் எச்சம். 15 லட்சம் மக்களை படுகொலை செய்த ஜோசப் ஸ்டாலினை படத்தை தங்கள் அலுவலகங்களில் வைத்து கேரள கம்யூனிஸ்ட் தலைவர்கள் வழிபட்டு வருகின்றனர். ஜனநாயகத்தின் மாண்புகளை உணர்ந்து இருந்தால், சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினின் படத்தை அலுவலகங்களிலிருந்து அகற்ற வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.