கோடநாடு வழக்கு விவகாரம் : குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணை நடத்தலாம் - ஐகோர்ட் அதிரடி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை மேல் விசாரணைக்கு தடை செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட கோவையை சேர்ந்த நிர்மல்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு மேல் விசாரணை நடத்தக்கூடாது.
தாங்கள் சொல்வது போல் வாக்குமூலம் அளிக்கும்படி பல தரப்பிலிருந்து மிரட்டல் வந்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே என்னிடம் விசாரணை நடத்திய நிலையில் மேல் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் கிடையாது என குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணை நடத்துவதில் தவறு கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பல மர்மங்கள் நிறைந்துள்ளன.
இதனால், உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க விசாரணை நடத்த வேண்டும். கோடநாடு எஸ்டேட் பங்குதாரர் சசிகலா இன்னும் விசாரிக்கப்படாமல் இருக்கிறார். எந்த நேரத்திலும் விசாரணையை விரிவுபடுத்தக்கூடும்.
இதன் அடிப்படையில், ஊட்டி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை நீதிமன்றம் ஏற்று கொண்டுள்ளது என்றார்.
இதனையடுத்து, நீதிபதி நிர்மல் குமார் பிறப்பித்த உத்தரவில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும், உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணை நடத்தலாம். வழக்கு தொடர்ந்தவர் புகார் தாரரோ, குற்றவாளியோ கிடையாது. சாட்சி மட்டுமே. வழக்கின் எந்தக் கட்டத்திலும் விசாரணையை விரிவுபடுத்தலாம். இவ்வாறு நீதிபதி கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.