பென்னேரி அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது காத்திருந்த அதிர்ச்சி… கிராம மக்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு!
பொன்னேரி அருகே வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டிய போது 3 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கொடூர் கிராமத்தை சேர்ந்தவர் டிராக்டர் மெக்கானிக்கான கோபி. இவர் தன்னுடைய நிலத்தில் வீடு கட்டுவதற்காக கடக்கால் தோண்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது, சுமார் 2 அடி ஆழம் பள்ளம் தோண்டிய போது பாறை போன்ற பொருள் கடப்பாரையில் தட்டுப்பட்டது.
அப்போது, அதனை பத்திரமாக வெளியே எடுத்துள்ளனர். அதில் பெருமாள், ஆண்டாள், அலமேலு ஆகிய 3 சாமி சிலைகள் பூமிக்கடியில் புதைந்திருந்தது கண்டெடுக்கப்பட்டது. இந்த செய்தி அப்பகுதியில் தீயாய் பரவியது. அங்கு வந்து குவிந்த கிராம மக்கள் தீபமேற்றி, கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு வழிபாடு நடத்தினார்கள்.
தங்களது ஊரில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகளை இங்கேயே கோவிலில் வைத்து வழிபாடு நடத்த உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகளை மீட்டு பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருங்கல் பாறை சிலைகளா அல்லது பச்சை நிறத்தில் இருப்பதால் மரகத சிலையா என்பது குறித்து தொல்லியல் துறையினர் கொண்டு ஆய்வு செய்யப்படும் எனவும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.