தஞ்சையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் அடித்துக் கொலை! அதிர்ச்சி சம்பவம்
காவல் துறை விசாரணையில் இருந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர், அண்ணா நகரைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவர் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர். இவருடைய வீட்டில் 10 நாட்களுக்கு முன்பு பூட்டை உடைத்து 6 சவரன் நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கம் திருட்டு சம்பவம் நடந்தது. இது குறித்து மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில், சீர்காழி அருகேயுள்ள புதுப்பட்டினம் பழைய முதன்மைச் சாலையைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் சத்தியவாணனை (வயது 34) போலீசார் பிடித்து, அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகேயுள்ள தனி அறையில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், திடீரென சத்தியவாணன் அதிகாலை உயிரிழந்தார்.இவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், அதனால், தஞ்சாவூரிலுள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டதாகவும், அங்கு அவர் உயிரிழந்ததாகவும் காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சத்தியவாணன் மீது ஏற்கெனவே திருட்டு, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, குற்றச் சரித்திர பதிவேட்டில் இடம்பெற்றுள்ள சத்தியவாணனின் விரல்ரேகைப் பதிவு காவல் துறையிடம் உள்ளது. இந்த விரல்ரேவைப் பதிவும், சாமிநாதன் வீட்டில் பதிவான விரல்ரேகையும் ஒத்துப்போனதாகவும், அதன் அடிப்படையில் சத்தியவாணனைப் பிடித்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தார்கள்.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சத்தியவாணனின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, அவரது சகோதரி சண்முகப்ரியா, உறவினர் ஜெயபாலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சத்தியவாணன் எப்படி இறந்தார் என்பது குறித்து தஞ்சாவூர் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் முகமது அலி தனியாக விசாரணை நடத்தி வருகிறார்.