சென்னை பாரிமுனை ‘பாத்திமா ஜுவல்லர்ஸ்’ நகைக்கடை திடீர் தீ விபத்து - மக்கள் அலறி அடித்து ஓட்டம்!
சென்னையின் மிக முக்கிய வர்த்தக மையமான பாரிமுனையில் உள்ள பாத்திமா ஜுவல்லர்ஸ் நகைக்கடை அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சற்று நேரத்தில் தீ மளமளவென பரவி கட்டிடத்தின் இரண்டு அடுக்குகளிலும் கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் கடையில் இருந்த மக்கள் தீ விபத்து ஏற்பட்டவுடன் அலறி அடித்துக் கொண்டு உடனடியாக வெளியேறினர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடைக்கு கீழே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள தீ விபத்தில் சிக்கி எரிந்து நாசமாயின. நடைபாதையில் உள்ள கடைகள் சிலவற்றிலும் தீ பற்றியுள்ளது.
இந்த விபத்தில் கடைக்குள் இருந்த நகைகள் பெரும்பாலானவை தீயில் கருகியதால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து சில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.