“தம்பிக்காக பாதி பாதி கல்லீரல் தானம் செய்த சகோதரிகள்” – ரக்ஷா பந்தன் தினத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் அக்சத் (14). இவன் மஞ்சள் காமாலை நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டான்.
இதனால் அவரது கல்லீரல் செயலிழக்கும் நிலைமைக்குச் சென்றது. இது மட்டுமல்லாமல் 92 கிலோ எடையுடன் இருந்ததால் சிறுவன் உடல் பருமனால் பெரிதும் அவதிப்பட்டு வந்தான்.
உடனே கல்லீரலை மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்படி கல்லீரலை மாற்றவில்லையென்றால், நிலைமை மிகவும் மோசமாகி விடும் என்றும், சிறுவனைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும் என்றும் மருத்துவர்கள் கைவிரித்தனர்.
கல்லீரல் தானம் வழங்குவோரும் கிடைக்கவில்லை. இதனால் அவரது இரு சகோதரிகளான நேகா (29) மற்றும் பெர்னா (22) தங்களது தம்பிக்காக கல்லீரலைத் தானமாக வழங்க முன்வந்தனர்.
ஒருவர் உடலில் ஒரேயொரு கல்லீரல் மட்டுமே இருக்கும் என்பதால் ஒருவர் மட்டுமே முழு கல்லீரலையும் தானம் செய்ய வாய்ப்பு கிடையாது.
இதனால் இரு சகோதரிகளும் உணர்ச்சிப்பூர்வமான ஒரு முடிவை எடுத்தனர். அதன்படி இருவரும் பாதி பாதி கல்லீரலை தானமாக வழங்கப் போவதாக மருத்துவர்களிடம் கூறினர். மிகவும் சிரமமான கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையை டெல்லி அருகே குர்காவ்ன் நகரிலுள்ள மெதந்தா மருத்துவமனை மருத்துவர்கள் மேற்கொண்டார்கள்.
அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் வெற்றிக்கரமாக செய்து முடித்தனர். இதனால், அக்சத்தின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றினர். சகோதரர்-சகோதரி உறவுகளைப் போற்றும் ரக்ஷா பந்தன் தினத்தன்று இந்த அறுவைச் சிகிச்சை நடந்திருப்பது மிகவும் கவனித்தக்கது.
இதுகுறித்து அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர் நீலம் மோகன் கூறுகையில், “கல்லீரல் பாதிப்பு மட்டுமன்றி, உடல் பருமனாலும் சிறுவன் அக்சத் அவதிப்பட்டு வந்தான். அவரது சகோதரிகளுக்கும் அவருக்கும் ஒரே நேரத்தில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. தற்பொழுது மூவரின் உடல் நலமுடன் இருக்கிறார்கள். இதுதான் சகோதரத்துவத்தைப் போற்றும் உண்மையான ரக்ஷா பந்தன்” என்றார்.