ஒரே நாளில் பவானி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த 12 காதல் ஜோடிகள்! சற்று நேரத்தில் நடந்த பரபரப்பு
ஈரோடு மாவட்டம் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையம், மற்றும் அந்தியூர், பவானி காவல் நிலையங்கள் என 3 காவல் நிலையங்களில் 12 காதல் ஜோடிகள் திருமணம் செய்துகொண்டு பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்திருக்கிறார்கள்.
ஆடி மாதம் முடிந்து கடந்த செவ்வாய்க்கிழமை ஆவணி மாதம் பிறந்தது. இந்நிலையில், மாதத்தின் முதல் சுபமுகூர்த்த நாளான இன்று பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏழு காதல் ஜோடிகள் திருமணம் செய்துகொண்டு அடுத்தடுத்து தஞ்சமடைந்தனர்.
இதேபோல் அந்தியூர் காவல் நிலையத்தில் 3 காதல் ஜோடிகளும், பவானி காவல் நிலையத்தில் 3 காதல் ஜோடிகளும் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். காதல் செய்து கொண்டு வந்தவர்கள் அனைவரும் திருமண வயதை எட்டியவர்கள் என்பதால் அவர்களது பெற்றோர்களை அழைத்த போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
இதில் அனைத்து தரப்பு பெண் வீட்டாரும், திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில், அனைத்து மணமகன் வீட்டாரும் திருமணத்தை ஏற்றுக் கொண்டு மணமக்களை தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
ஒரே நாளில் பவானி உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 3 காவல் நிலையங்களில் 12 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.