மக்களை அதிர வைத்த நுங்கம்பாக்கம் சுவாதி வழக்கு! ராம்குமார் திட்டமிட்டு கொலை? நடந்தது என்ன?
கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ராம்குமார் மின்சார கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ராம்குமாரின் இறப்பில் பல்வேறு சந்தேகங்களும், மர்மங்களும் உள்ளதாக சர்ச்சைகள் எழுந்தன. இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.
வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சிறைத்துறையினருக்கு சம்மன் அனுப்பி மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் துரை ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, சிறைத்துறை ஓய்வுபெற்ற சூப்பிரண்டு அன்பழகன், ஓய்வுபெற்ற ஜெயிலர் ஜெயராமன், உதயகுமார், ஓய்வுபெற்ற தலைமை வார்டன் சங்கர்ராஜ், துணை ஜெயிலர் ராஜேந்திரன், துணை ஜெயிலர் உதயகுமார், வார்டன் ராம்ராஜ் உள்ளிட்டோர் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகினார்கள்.
மேலும் தடயவியல் துறை மருத்துவர்களான வேனு ஆனந்த் மற்றும் ஆண்டாள் ஆகியோரும் ஆஜராகினார்கள். இந்நிலையில், ஆஜரான சிறைத்துறையினர் தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தார்கள்.
இந்த வழக்கு விசாரணை வருகிற 28-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ், ராம்குமார் மரணத்திற்கு தொடர்புடைய நபர்களுக்கு உரிய முறையில் தண்டனை வழங்க வேண்டும். ராம்குமார் உடலில் மின்சாரம் பாய்ந்ததற்கான எந்த தடயமும் கிடையாது என்று இன்று ஆஜராகிய மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்றார்.