அம்மிக்கல்லை போட்டு கர்ப்பிணி தாய் கொலை- குற்றவாளியை தெளிவாக காட்டிக்கொடுத்த குழந்தை
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் வினிதா. கர்ப்பிணியான இவர் தனது குழந்தை, கணவர், மாமியாருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று வினிதாவின் கணவர் வெளியூர் சென்றிருந்தார். மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்க்கும் மாமியார் அன்று வேலைக்கு சென்றுவிட்டார்.
இதனால் தனது ஆறு வயது குழந்தையுடன் வினிதா தனியாக வீட்டில் இருந்தார். அடுத்த நாள் காலை பணி முடித்துவிட்டு, வினிதாவின் மாமியார் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டில் ரத்த வெள்ளத்தில் மருமகள் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், தாய் இறந்தது தெரியாமல் குழந்தை அவரது உடல் அருகே அழுது கொண்டிருந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வினிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலிசார், குழந்தையிடம் தாய் உயிரிழந்தது குறித்து விசாரித்தனர். அப்போது, குழந்தை கூறியதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.
சம்பவத்தன்று வினிதாவின் உறவினர் ஆகாஷ்குமார் என்பவர் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ஆகாஷ்குமார், வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து வினிதாவின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து, போலீசார் தப்பிச்சென்ற ஆகாஷ் குமாரைத் தேடி வருகின்றனர்.