இரட்டை சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம்... ஒரே நாளில் பிரசவம்... - கேரளாவில் நடந்த அதிசயம்
கேரள இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் திருமணம் செய்துகொண்டு, ஒரே நாளில் குழந்தை பெற்ற சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம், தலயோல பரம்பைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகர் நாயர். இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி என்ற இரட்டை பெண்கள் உள்ளனர்.
இருவரும் சிறு வயது முதலே இணை பிரியாமல் ஒன்றாகவே வளர்ந்து வந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் பிரியாமல் வளர்ந்து விட்டதால், திருமணத்தையும் மகள்களின் விருப்பப்படி, மாப்பிள்ளை பார்த்து ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி என்ற இரட்டை சகோதரிகளுக்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது.
சிறிது மாதத்தில் இவர்கள் இருவரும் கர்ப்பம் தரித்தனர். இருவரும், தாங்கள் பிறந்த மருத்துவமனையில் குழந்தைகளை பெற்று கொள்ள விரும்பினார்கள். கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஸ்ரீபிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு ஸ்ரீலெட்சுமிக்கும் வலி ஏற்பட்டது. அவரும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நேற்று முன்தினம் மதியம் சுமார் 2.20 மணியளவில் ஸ்ரீபிரியா ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதே நாள் மாலை 6.45 மணிக்கு ஸ்ரீபிரியாவை தொடர்ந்து ஸ்ரீ லெட்சுமிக்கும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இதனையடுத்து, இந்த இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். அதேநேரம் பிறந்த குழந்தைகள் 2 பேருக்கும் ஒரே ரத்த வகையான 'ஓ' பாசிட்டிவ் என்பது குறிப்பிடத்தக்கது.