பணத்தை திருடி மின்னல் வேகத்தில் பறந்த திருடர்கள் - தைரியமாக துரத்திப் பிடித்த பெண் காவலர் - குவியும் பாராட்டு
பட்டப்பகலில் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலேயே 4 பேர் கொண்ட கும்பல் பணம் பறிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர், சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் அகஸ்டின் (60). இவர் ஒய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர். இவர், சத்துவாச்சாரியில் உள்ள IOB வங்கிக்கு சென்று தனது வங்கி கணக்கிலிருந்து ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு அதை ஒரு லெதர் பையில் போட்டு தனது ஸ்கூட்டரில் புறப்பட்டுச் சென்றார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அவர் வந்தார். அப்போது, அங்குள்ள சித்த மருத்துவ மையத்தில் உள்ள தனது நண்பரை பார்க்கச் சென்றிருக்கிறார். அப்போது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு பணப்பையை ஸ்கூட்டரின் சீட்டிற்கு அடியில் வைத்து பூட்டிவிட்டு சென்றார்.
அவர் வங்கியில் வெளியேறியதிலிருந்து ஒரு கும்பல் நோட்டமிட்டு அவர் பின்னாடியே வந்துக்கொண்டிருந்தது.ஹெல்மெட் போட்டுக் கொண்டு வந்த அந்த 4 பேர் கொண்ட கும்பல், அகஸ்டின் நண்பர் வீட்டிற்கு உள்ளே சென்றதும், ஸ்கூட்டரின் பின் பகுதியை கள்ளச்சாவி போட்டு திறந்து அதிலிருந்த பணம் பையை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளது. இதைக் கண்ட அகஸ்டின் கூச்சல் போட்டு அலறி கத்தினார்.
திருடனைப் பிடிங்கள் என்று ஆவேசமாக கத்திக் கொண்டு ஓடினார். பொது மக்கள் யாரும் வழிப்பறி குப்பலை பிடிக்க முன் வரவில்லை. அப்போது, அந்த வழிப்பறி கும்பல் ஆட்சியர் அலுவலக கேட்டைத் தாண்டி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது அகஸ்டினின் அலறல் சத்தத்தை கேட்ட பாதுகாப்பு பணியில் இருந்த ஜீவிதா என்ற பெண் காவலர் உடனே அந்த வழிப்பறி கும்பலை விரட்டிச் சென்று பிடிக்க முயற்சி செய்தார்.
பெண் காவலர் விரட்டுவதை கண்ட வழிப்பறி கும்பல் பணப்பையை போட்டுவிட்டு அந்த இரண்டு இருசக்கர வாகனத்தில் தப்பித்து ஓடிச் சென்று விட்டனர். மேலும் ஓடும் போது ஒரு செல்போனையும் தவறவிட்டு அந்த கும்பல் சென்றுவிட்டது.
இதனையடுத்து பெண் காவலர் ஜீவிதா பணப்பையை மீட்டு அகஸ்டியனிடம் கொடுத்தார். மேலும், வழிப்பறி கும்பல் தவற விட்ட செல்போனை காவல் துறையில் ஓப்படைத்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், அவர்கள் தவறவிட்டுச்சென்ற செல்போனை வைத்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். துரிதமாக செயல்பட்டு தைரியமாக வழிப்பறி கும்பலை விரட்டிச்சென்ற பெண் காவலர் ஜீவிதாவுக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.