பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய ஆசிரியை - அதிரடியாக பணி நீக்கம் செய்த நிர்வாகம்

samugam-teacher-dismiss
By Nandhini Oct 27, 2021 04:09 AM GMT
Report

கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடிய, ராஜஸ்தான் ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

துபாயில் 'டி 20' உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றது. இதன் வாயிலாக, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிரான தன் முதல் வெற்றியை பாகிஸ்தான் பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில், தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தவர் நபீசா அட்டாரி.

இவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதும், 'வாட்ஸ் ஆப்பில், 'நாம் வெற்றி பெற்றுவிட்டோம்' என பதிவு செய்து மற்றவர்களுக்கு பகிர்ந்தார். மேலும், வாட்ஸ் ஆப்பில் தன் 'ஸ்டேடஸ்' ஆக, பாக். வீரர்களின் வெற்றிக் கொண்டாட்ட புகைப்படத்தையும் வைத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, நபீசா அட்டாரியை பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறது. மேலும், அவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது குறித்து நபீசா கூறுகையில், நான் இந்தியர். இந்தியா மீது பெரும் பற்று வைத்து உள்ளேன். ஜாலிக்காக பதிவிட்ட ஒரு விஷயம், விவகாரமாகி விட்டது. யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு கிடையாது. நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.  

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய ஆசிரியை - அதிரடியாக பணி நீக்கம் செய்த நிர்வாகம் | Samugam Teacher Dismiss