கரகாட்டம், தப்பாட்டத்துடன் மாணவ, மாணவிகளை வரவேற்ற தலைமை ஆசிரியர் - குவியும் பாராட்டு
முதுகுளத்தூர் அருகே கரகாட்டம், தப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த தலைமை ஆசிரியரின் செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் மூடப்பட்டது. இந்நிலையில், இன்று 1 முதல் 8ம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து, கீழச்சாக்குளம் அரசுப்பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வருகை தந்தனர். அவர்களை உற்சாகமாக வரவேற்கும் விதமாக, பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர் கலை முருகன் என்பவர் தப்பாட்டம் , கரகாட்டம், பொய்க்கால் ஆட்டங்கள் ஆடி மாணவர்களுக்கு மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு கொடுத்தார்.
இதனால் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு முதல் நாள் தங்களுடைய படிப்பைத் தொடங்கினார்கள். பள்ளியில் தலைமையாசிரியர், பிற ஆசிரியர்கள் மாணவர்களை உற்சாகமாக வரவேற்றதை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.