நடிகர் ரஜினிகாந்திற்கு ரத்தநாள அடைப்பு - தீவிர சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை
'நடிகர் ரஜினிக்கு, இதயத்திலிருந்து மூளைக்கு செல்லும் ரத்தநாளத்தில், கழுத்து பகுதியில் இருந்த அடைப்பு சரி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அடுத்த சில நாட்களில் அவர் வீடு திரும்புவார்' என காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் கடந்த 25ம் தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், ரஜினிக்கு, 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்பட்டது.
சென்னைக்கு திரும்பிய நடிகர் ரஜினி, தன் பேரக் குழந்தைகளுடன், அவரது நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள, 'அண்ணாத்த' திரைப்படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைநதார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, ரஜினிக்கு மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனால், உடனடியாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேவையான மருத்துவ பரிசோதனைகளை செய்ததில், இதயத்திலிருந்து மூளைக்கு செல்லும் ரத்தநாளத்தில், கழுத்து பகுதியில் அடைப்பு இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, உடனடியாக, அவரது தொடையில் சிறிய துளையிடல் வாயிலாக, ரத்தநாள அடைப்பை டாக்டர்கள் சரி செய்துள்ளனர். இது உடனடியாக சரி செய்யாமல் விட்டால், பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். நடிகர் ரஜினிக்கு ஏற்கனவே, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், அவரது உடல்நிலையை, மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இதுகுறித்து, காவேரி மருத்துவமனை இணை நிறுவனரும், செயல் இயக்குனருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது -
ரஜினிக்கு கழுத்து பகுதியில் உள்ள ரத்தநாளத்தில் அடைப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அந்த அடைப்புக்கு, நேற்று சிகிச்சை அளித்து சரி செய்யப்பட்டது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். அடுத்த சில தினங்களில், அவர் வீடு திரும்புவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வந்திருந்த ரஜினியின் மனைவி லதா, உறவினர் ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் ரஜினி நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ரஜினியின் உடல்நிலை குறித்து தகவல் அறிந்து வந்த ரசிகர்கள், பொது மக்கள் மருத்துவமனைக்கு வர துவங்கியதையடுத்து, அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 'டுவிட்டர்' பக்கத்தில், 'உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருமை நண்பர் ரஜினி, விரைந்து நலம் பெற்று, இல்லம் திரும்ப விழைகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.