"வாழ்வாதாரத்துக்கே வழியில்ல ஐயா" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த விவசாய பெண்கள்!
பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்திற்கு செல்லும் வழியில் விவசாய பெண்களிடம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறைகளை கேட்டு அறிந்து கொண்டார்.
தமிழகத்தில் ஓராண்டுக்கு மேலாக கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று காந்தி ஜெயந்தியையொட்டி கிராமப்புற பகுதிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த திமுக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து, இன்று அனைத்து கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்று வருகின்றன. மதுரை மாவட்டம் பாப்பாபட்டி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்றார்.
முதல்வராக பதவியேற்ற பின்பு முதல் முறையாக அவர் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றார். அக்கூட்டத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.
மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் என்று அவர் உறுதி கூறினார். இதனிடையே கிராம சபைக் கூட்டத்தில் செல்வதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வழியில் வயலில் இறங்கி அங்கு வேலை செய்து கொண்டிருந்த விவசாய பெண்களிடம் குறைகளை கேட்டார்.
அப்போது அந்த பெண்கள், "வாழ்வாதாரத்திற்கு வழியில்லை. எந்த லோனும் எங்களுக்கு கிடைத்தது கூட இல்லை.
இரவு நேரத்தில் ஒரு விளக்கு கூட இல்லை. மிகவும் இருட்டாக இருக்கிறது. பெண்கள் செல்லவே பயமாக உள்ளது.
நீங்கள் தான் எங்களது குறையை தீர்த்து வைக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர் அப்பெண்கள்.
பொறுமையாக நின்று குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயமாக உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.