‘ஜெய் பீம் ’ படத்தில் அடையாளங்களை மாற்றியது அயோக்கியத்தனம் இல்லையா? - பாஜக கடும் எதிர்ப்பு
‘ஜெய் பீம்’ படத்தில் குற்றவாளியின் பெயரை மறைப்பது, மாற்றுவது, குற்றவாளிக்கு ஆதரவாக செய்யும் அயோக்கியத்தனம் இல்லையா என்று நடிகர் சூர்யாவுக்கு பாஜக வழக்கறிஞர் பிரிவு கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்திருக்கும் படம் ‘ஜெய் பீம்’. இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் காவல் துறையினரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததையும், நீதி கிடைக்க துணையாக நின்ற முன்னாள் நீதிபதி சந்துருவையும் மையப்படுத்தியே இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இந்தக் கொடூரத்துக்குக் காரணமான காவல் அதிகாரியின் பாத்திர படைப்பு மாற்றப்பட்டிதற்கு எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன.
இது குறித்து, தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அஸ்வத்தாமன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது -
“இருளர் சமுதாயத்தினர் வாழ்க்கை தரத்தில் அடிமட்டத்தில் இருப்பவர்கள். இவர்களுக்கு ஓட்டு வங்கி இல்லாததால், திராவிட அரசுகளால் கைவிடப்பட்டவர்கள். அவர்களில் ஒருவரை காவல் துறை துன்புறுத்தி கொலை செய்தது, ஓர் உண்மை சம்பவம். அதைப் படமாக எடுத்ததாக சொல்கின்றனர். இறந்தவர், வழக்காடிய வழக்கறிஞர் பெயர் மற்றும் அடையாளங்கள் எதுவும் மாற்றப்படவில்லை.
ஆனால், குற்றம் செய்தவர்களின் பெயர் அடையாளங்கள் மட்டும் வன்மத்துடன் மாற்றப்படுகிறது. குற்றவாளி பெயரை மறைப்பது, மாற்றுவது, குற்றவாளிக்கு ஆதரவாக செய்யும் அயோக்கியத்தனம் இல்லையா? முழுமையாக ஆவணப்படுத்தப்பட வேண்டிய ஓர் அவலத்தை, தங்களுடைய சொந்த வன்மங்களால் வீணாக்கியுள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தைப் பார்த்து விட்டு, மிகவும் நெகிழ்ந்து பாராட்டியதாக அறிந்தேன். படத்தை பாராட்டுவது இருக்கட்டும். முதலில் இருளர் சமூகத்தினருக்கு, பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கி, நல்லது செய்யட்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.