ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி கழுத்தை அறுத்து தற்கொலை - சிக்கிய கடிதத்தால் பரபரப்பு!

samugam-tamilnadu
By Nandhini Nov 03, 2021 10:49 AM GMT
Report

ராயப்பேட்டை அருகே ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் வசித்து வருபவர் சிவனருள். இவர் தமிழக அரசின் பத்திரப் பதிவுத் துறை தலைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுமதி (53). இந்த தம்பதியின் மகள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வருகிறார். மகன் கல்லூரியில் படித்து வருகிறார்.

சுமதி கடந்த 2 ஆண்டுகளாக மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில், நேற்று காலை அனைவரும் தங்களது பணிக்காக வெளியே சென்றுவிட்டனர். அப்போது, சுமதியும் வீட்டில் வேலை செய்யும் பணி பெண் மட்டும் தனியாக இருந்திருக்கின்றனர். குளிப்பதற்காக குளியலறைக்குள் சென்ற சுமதி வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை.

இதனால், சந்தேகமடைந்த வேலைக்காரப் பெண் அக்கம் பக்கத்தினர் அழைத்திருக்கிறார். கதவை உடைத்து பார்த்தபோது ரத்தவெள்ளத்தில் சுமதி இறந்து கிடந்தார். அங்கு ஒரு பிளேடும் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுமதியின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, வீட்டை போலீசார் பரிசோதனை செய்தனர். அப்போது, படுக்கை அறையில் கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில், மன அழுத்தத்தால் தான் தற்கொலை செய்து கொள்வதாக சுமதி எழுதியிருந்ததாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி கழுத்தை அறுத்து தற்கொலை - சிக்கிய கடிதத்தால் பரபரப்பு! | Samugam Tamilnadu