கோவை மாணவி தற்கொலை : தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சனிடம் முதற்கட்ட விசாரணை நிறைவு
கோவை கோட்டைமேடு ஆர்.எஸ். புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் கடந்த 11ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்து, தற்போது கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
அவரை வருகின்ற 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாலியல் துன்புறுத்தல் குறித்து, பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சனை கைது செய்ய வேண்டும் என்று கோரி மாதர் சங்கத்தினர், மே 17 இயக்கம், உறவினர்கள், மாணவர்கள் இணைந்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதன் அடிப்படையில், பள்ளி தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், பெங்களூரில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை மீரா ஜாக்சனை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் பெங்களூருவிலிருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்டார். முதற்கட்டமாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தகவல் தெரிவித்திருக்கிறார்.