திருச்சியில் ரயில் பெட்டிக்குள் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை - பயணிகள் அதிர்ச்சி
திருச்சி ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் பெட்டியில் சுமை தூக்கும் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி கண்டோன்மெண்ட் வார்னர்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜபருல்லா. இவர் திருச்சி ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பார்சல் அலுவலகத்தில் சுமை தூக்கும் தொழிலாளி ஆக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜபருல்லா வேலைகளை முடித்து விட்டு வீடு செல்லவில்லை.
திருச்சி ரயில் நிலையத்தின் 7-வது மற்றும் 8-வது ரயில்வே நடைமேடைகளுக்கு இடையே உள்ள யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள் உள்ள மின்விசிறியின் கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜபருல்லாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த தொடர்பாக திருச்சி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ஜபருல்லா குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 4 நாட்களாக வீட்டிற்கு செல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால், அவர் ரயில் பெட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.