தூக்கு கயிற்றில் பிணமாக தொங்கிய மகன் - அதிர்ச்சியில் தாய் மயங்கி விழுந்து பலி!
சேலத்தில் மகன் தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சியில் தாய் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் முகமதுபாஷா. இவர் சொந்தமாக அச்சகம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி நூர்ஜகான். இவர்களது மகன் நிஜாமுதீன் (33). எம்.எஸ்.சி வரை படித்துள்ளார்.
இவருக்கு வேலை கிடைக்காததால் தந்தைக்கு உதவியாக அச்சகத்தை பார்த்து வந்திரக்கிறார். நிஜாமுதீன் வேலை கிடைக்காததாலும், திருமணம் நடக்காததாலும் மனமுடைந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவர் தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் நிஜாமுதீன் வெளியே வராததால் பெற்றோருக்கு சந்தேகம் வந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, நிஜாமுதீன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் நூர்ஜகான் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நூர்ஜகான் மாரைடப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்கள்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த டவுன் போலீசார், நிஜாமுதின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகன் இறந்த அதிர்ச்சியில், தாய் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.