கோவை மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு - கதறி அழுத பெற்றோர்கள் - சோகத்தில் மூழ்கியது கிராமம்
கோவையில் சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவியை ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியையும், பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனையும் போலீசார் கைது செய்துள்ளனர். மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தலைமறைவான அவரை பெங்களூரில் வைத்து போலீசார் கைது செய்தனர். பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டதால் மாணவியின் உடலை வாங்க பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, மாணவியின் வீட்டின் முன்பு மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. கோவை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட மீரா ஜாக்சனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கண்ணீருடன் கதறி அழுதபடி அப்பகுதி மக்கள் மாணவியின் உடலைப் பெற்றுக்கொண்டனர். இதனால், அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.