Saturday, May 3, 2025

சிறுமிகளை கர்ப்பமாக்குவோம்... ஆபாசமாக சித்தரித்து பாடிய கானா பாடகர் சரவெடி சரண் கைது

samugam saran-arrest
By Nandhini 3 years ago
Report

பால்வாடி படிக்கும்போது வாங்கிக்கொடுத்தேன் பூந்திய எட்டாவது பாசாயிட்டு எடுக்க வச்சேன் வாந்திய.. என்று பாடிய கானா பாடகர் சரவெடி சரண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தேடி வந்த நிலையில், தற்போது அவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம், டோனி ராக் - போட்டி கானா என்கிற பெயரில் ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. அதில் சரவெடி சரண், டோனி ராக் கானா பாடகர்கள் பாடிய பாடல் ஒன்று பெரும் சர்ச்சையாக வெடித்தது.

அப்பாடலில் சிறுமிகளை ஆபாசமாக சித்தரித்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. வக்கிரமான மனநிலையில் பாடப்பட்ட இந்த பாடலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், திருவள்ளூர் எஸ்.பி. அருண்குமார் கவனத்திற்கு இந்த விவகாரம் சென்றது. அவர் சம்பந்தப்பட்டவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருவதாகவும், மக்களும் சரண் குறித்த விபரம் தெரிந்தால் சொல்லுங்கள் என்று அறிவித்தார்.

இந்நிலையில், சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

இது குறித்து திருவள்ளூர் காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது -

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியாக வன்முறையைக் கையாளும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்வது வேதனைக்குரிய நிகழ்வாக கருதப்படுகிறது.

இதனால் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுவதோடு மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரும் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகின்றனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தடுக்க, பல்வேறு சிறப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டு போலீஸ் உட்பட பல்வேறு சமூகநல அமைப்புகள் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சுயலாபத்திற்காக குழந்தைகளை தவறாகவும் ஆபாசமாகவும் சித்தரித்து வருமானம் தேடும் கும்பல் இருப்பது வேதனைக்குரிய விஷயம். மேலும், சரவெடி சரண் வீடியோ குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து, அவர் மீது திருவள்ளூர் மாவட்ட சைபர் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அவர் மீதான வழக்கு தற்போது விசாரணையில் இருக்கிறது. இது போன்ற கடுமையான நடவடிக்கையின் மூலம் இது மாதிரியான குற்றங்களை தடுக்க முடியும் என்று சொல்லியிருப்பதோடு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தூண்டும் விதமாக இது போன்று ஏதேனும் வீடியோ பதிவுகளும், செய்திகளும் கவனத்திற்கு வந்தால் உடனே காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.