கைக்குழந்தை மீது சானிடைசர் ஊற்றி தீ வைத்த கொடூர தாய் - நெருப்பில் துடிதுடித்த குழந்தை - அதிர்ச்சி சம்பவம்
குடும்ப பிரச்சினையால் கைக்குழந்தை மீது சானிடைசர் ஊற்றி தீ வைத்த தாய், தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் ராவத் - சுவர்ணா தம்பதி. இவர்களுக்கு 7 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. வெங்கடேஷ் ராவத் கொரோனா காரணமாக வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இதனால், குடும்பத்தில் அதிக பண பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. பணப்பிரச்சினை காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது, ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் ராவத் வீட்டில் இருந்த பாட்டிலை அடித்து உடைத்து வெளியே சென்றுவிட்டார்.
இதனால், மன உளைச்சலில் இருந்த சுவர்ணா தனது குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, குழந்தை மீதும், தன் மீதும் சானிடைசரை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
இவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
70 சதவிகித தீக்காயங்களுடன் சுவர்ணா மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.